2018 இன் முதல் 10 பூகோளச் சிக்கல்கள்

செய்திப்பார்வை 05 ஜனவரி 2018

தாருள் அமன் எம்மிடையே இருக்கின்ற அரசியல் அவதானிகளுக்கு 2018 இலே அவர்கள் அதிக கவனம் செலுத்துவதற்கு தகுதியான 10 முக்கிய பூகோளச் சிக்கல்களை சுட்டிக்காட்டுவதற்காக  இந்த ஆக்கத்தை பிரசுரிக்கின்றது.

1. சிரியா - சுமார் அரைத் தசாப்த்தத்தைத் தாண்டியிருக்கின்ற சிரியப் போரிலே சிரிய மக்களின் இறுதி நிலைப்பாட்டில் இத்லிப் களம் முக்கிய பங்காற்றும். அலெப்போவின் வீழ்ச்சி அசாத்தின் அரசை வீழ்த்துவதற்காக போராடிய இஸ்லாமிய புரட்சிப்படையினருக்கும், மக்களுக்கும் பாரிய பின்னடைவாக அமைந்தது எமக்குத்தெரியும். இன்று அசாத்தின் படை ஆயுத ரீதியாக மிகைத்திருக்கின்ற போதிலும் அதற்கு வடக்கு சிரியாவை முழுவதுமாக கைப்பற்றுவதற்கு சில வாரங்கள் தொடக்கம், மாதங்கள்  செல்லலாம். அசாத்தின் படை மிகவும் குறைவடைந்திருப்பதும், வெளியிலிருந்து வந்து போராடுகின்ற படைகளின் உதவியுடனேயே அவனின் படையினரால் யுத்த முனையில் இன்று வரை தாக்குப்படிக்க முடிகிறது என்பதுவே யதார்த்தம். அனேகமாக 2018ஆம் ஆண்டு, களமுனையில் வெல்வது என்பது வேறு, கைப்பற்றப்பட்ட பகுதிகளை தக்க வைத்துக்கொள்வது என்பது வேறு என்பதை அசாத்துக்கு உணர்த்தும்.

அமெரிக்காவை பொருத்தமட்டில் 2018 இல் ஓரளவுக்காவது தமக்கு சாதகமான ஒரு அரசியல் தீர்வை சிரியாவில் எட்டிவிட வேண்டும் என்பது ஒரு முக்கிய இலக்காக இருக்கும். இன்று அரசுக்கு சாதகமாக இருக்கின்ற சூழலைப் பயன்படுத்தி, புரட்சிப்படைகளையும், மக்களையும் இன்றிருக்கின்ற அரசுடன் இணைந்த ஒரு அரசியல் மாற்றத்தை எட்டுவதற்கு அமெரிக்கா நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு இடைக்கால தீர்வைத்தானும் எட்டக்கூடிய வகையில் ஜெனிவா, வியன்னா, ரியாத் அல்லது அஸ்டானா என்பவற்றிலே இடம்பெற்ற பேச்சுக்களில் முக்கியமான புரட்சிக்குழுக்கள் பங்கெடுப்பதை நிராகரித்திருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2. பாகிஸ்தான் தேர்தல்கள் - செப்டெம்பர் 2018உடன் தற்போது ஆட்சியிலிருக்கின்ற முஸ்லிம் லீக் அரசாங்கமும், தேசிய சபையும் களைக்கப்பட்டாக வேண்டும். புதிய தேர்தல் இடம்பெற வேண்டும். ஆனால் பாகிஸ்தானின் நிலையற்ற அரசியல் முறைமை காரணமாக அதற்கு முன்னரேயே தேர்தல் இடம்பெறவும் வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானின் வரலாற்றிலேயே இன்றிருக்கின்ற அரசாங்கமே வழங்கப்பட்ட தனது தவணையை முழுமையாக முடித்து அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு அதிகாரத்தை கை மாற்றிய அரசாங்கமாகும். இன்று நவாஸ் ஷரீஃப் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் கூட அடுத்த தேர்தல் வரை இன்றிருக்கின்ற அவரது அரசாங்கம் நிலைக்குமானால் அது மீண்டும் அதிகாரத்தை புதிய அரசாங்கத்திற்கு கைமாற்றிய தகுதியைப் பெற்றுக்கொள்ளும்.

பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இலக்குகளை அடைவதற்கான கொள்கைகளை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டிலேயே முக்கிய கட்சிகள் இரண்டும் இருப்பதால் தேர்தல் முடிவுகள் எந்தவகையிலும் முக்கிய திருப்பங்களைக் கொண்டு வரப்போவதில்லை. ஏனெனில் முழு நாட்டின் முறைமையும் அரசியல் தலைமைகளினதும், அவர்களின் எஜமானர்களினலும் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாகவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறதேயொழிய மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாகவல்ல. இந்தத் தேர்தல்கள் பாகிஸ்தானின் இன்றைய முறைமை மீது மீண்டும் மக்களுக்கு ஒரு குருட்டு நம்பிக்கையை ஏற்படுத்த பயன்படப் போகிறது. அதுதான் தலைமைகளின் தேவையும் கூட. அது தவிர பாகிஸ்தான் வேறு எந்த முக்கிய மதிப்பீட்டின்  அடிப்படையிலும் ஒரு தேசமாக வீழ்ச்சி கண்டே வருகின்றது.

3. சவூதி சிக்கல்கள் - சவூதி முடியாட்சி உத்தியோகவூர்வமான சிக்கலில் தவிக்கிறது. எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவு இதுவரை காலமும் சவூதி முடி முழுமையாகத் தங்கியிருந்த பொருளாதார மாதிரியின் உண்மைநிலையை தோலுரித்துக் காட்டியுள்ளது. முக்கிய தரப்புக்களை தமது விசுவாசிகளாக தக்க வைத்துக்கொள்வதற்கு 'விசுவாசத்திற்கு காசு - ஆழநெல கழச டழலயடவல" என்ற கேவலமான பேரம்பேசும் மாதிரி,  முடியாட்சியின் கருவூலத்தை நிரப்பி வந்த எண்ணெய் மூலமான வருமானத்திலேயே முழுமையாக தங்கியிருந்தது. ஒரு பரலுக்கு 100 டொலர்களுக்கு மேல் சவூதியின் எண்ணெய் பீப்பாய்கள் விலைபோனால்தான் சவூதியின் பஜ்ஜடை அமூல் செய்ய முடியும். எனவே எண்ணெய் விலைச் சரிவு சவூதி அதிகார கட்டமைப்பை பேணுவதற்கு பெரிய தலையிடியாக அமையும். இந்த சிக்கல் போதாதற்கு முடிக்கான இளவரசன் முஹம்மத் பின் சல்மான் தனது பிடியை பலப்படுத்திக்கொள்வதற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்த சகாக்களுக்கு எதிராகச் மேற்கொண்ட களையெடுப்பு நடவடிக்கையின் எதிர்விளைவு 2018இலே சவூதி முடிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

4. எகிப்து நெருக்கடி - எகிப்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. பொருளாதாரம் பாதாளத்தை நோக்கிச் சரிவதால் அதிபர் அப்துல் பத்தாஹ் அல் சீசியின் கைகளில் தேர்வுகள் மிகச் சொற்பமாகவே உள்ளன. முந்தையவர்களைப்போலவே சீசி அவரது நாட்டின் வருமானத்தின் 60 சதவீதத்தை ஏற்கனவே பெற்ற கடன்களை அடைப்பதிலேயே விரயமாக்கி வருவதால் நாட்டின் பொதுச் சேவைக்கான நிதிக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த உண்மையை மூடி மறைப்பதற்காக பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அறிவித்து வருகிறார் அவர். இதுவரை சமூக ஒத்துழைப்பையும், வாழ்க்கைத்தரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உதவித்தொகைகளை வழங்கி வந்தது எகிப்து. ஆனால் எகிப்தின் நிதி நிலைமை இனி இதை அனுமதிக்காது என்பது தெளிவு. நிகழ்ச்சித்திட்டங்களும்(Super Projects), அரசு கடைப்பிடிக்கும் பிற கொள்கைகளும் வறுமை போன்ற நீண்ட காலப்பிரச்சனையை தீர்வின்றி புரக்கணித்து குறுகிய கால ஆதாயத்தை தேடும் முயற்சியாகவே தொடர்கின்றன. மேலும் சீசியின் ஆட்சியின் கீழ் காணாமற்போனோரின் எண்ணிக்கையும் அதிகளவில் கூடியிருக்கிறது. உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான எகிப்திய ஒருங்கிணைப்பு என்ற நிறுவனம் சீசி ஆட்சியில் அமர்ந்த ஜுலை 2013க்கும் 2016 ஜுலைக்கும் இடையில் பலவந்தமாக காணமற்போனோர் தொடர்பான 2811 நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றது. மாற்று அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதும், சாதாரண அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும் ஒருவர் கைது செய்யப்படுவதற்கும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கபடுவதற்கும் போதுமான சூழல் உருவாகியிருக்கின்றது. எனவே எகிப்திய மக்கள் பாரியளவில் வீதிக்கிறங்கி மீண்டும் போராடுவதற்காக காலம் தூரத்தில் இல்லை எனத் தோன்றுகின்றது.

5. அமெரிக்கா இடைக்கால தேர்தல் - 2016 தேர்தல் முடிவுக்கு பின்னர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முதலாக மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறார். நவம்பர் 6, 2018 இல் அமெரிக்காவின் பிரதிநிதிகள் அவைக்கான அனைத்து 435 இடங்களுக்கும், செனட்டின் 100 இடங்களில் 33 தொகுதிகளுக்கும் தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. 39 மாநில மற்றும் பிராந்திய ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சிக்கான தேர்தல்களும் இடம்பெறவிருக்கின்றன. 2018 இன் இடைக்காலத் தேர்தல் வாக்கெடுப்பு டொனால்ட் ட்ரம்பின் செயல்திறனையும், அரசியல் எதிர்காலத்தையும் நிறுத்துப்பார்க்கின்ற ஒரு தேர்தலாக அமையும்.  இன்று பிரதிநிதிகள் அவையின் 435 இடங்களில் 239 ஐ குடியரசுக்கட்சியும், 194 ஐ ஜனநாயகக் கட்சியும் கொண்டிருக்கின்ற போதிலும் 2018 தேர்தலில் ஜனநாயகக்கட்சிக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிகிறது. தற்போது இரண்டு அவைகளையும் குடியரசுக்கட்சி தனது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தாலும் பல சிக்கல்களால் ட்ரம்ப் பலகீனப்பட்டு உள்ளார். இரு அவைகளில் ஒன்றை குடியரசுக்கட்சி இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்றைய அமெரிக்க கொள்கைகளையும், குறிப்பாக ட்ரம்பையும் அது மென்மேலும் பலகீனப்படுத்தும்.

6. அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை - 2018இலும், அதற்கு அப்பாலும் அமெரிக்க நிர்வாகம், தீவிரமான வெளிவிவகார சிக்கல்களைச் சந்திக்கும். 2015இலே ஒபாமா நிர்வாகம் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் முடிவுடன் உலகில் அமெரிக்காவின் நிலை தொடர்பான அதன் பார்வை மாற்றம் பெற்று விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா உலகில் தனது தலைமைத்துவம் தொடர்பாக ஓரளவு உறுதிப்பாட்டுடன் இருந்தது. அந்த மூலாபாயம் "அமெரிக்கா புதிய நூற்றாண்டின் வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கும் பாதுகாப்பற்ற உலகின் அபாயங்களுக்கு எதிராக தனது நலன்களைப் பாதுகாப்பதற்கும் வலுவானதும் சிறந்ததுமான ஒரு நிலையில் தன்னை வைத்துள்ளது." எனக்கூறியது. இந்த மனோநிலை, இப்போது காலாவதியாகி விட்டது. அதனுடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் மற்றும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் போன்றவறறில் ஏற்பட்ட மாற்றங்கள் அதனை மேலும் அழுத்தத் தொடங்கியது. டிசம்பர் 18 ம் தேதி, ட்ரம்பின் நிர்வாகமானது அதன் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை வெளியிட்டது, இந்த மூலோபாயம் அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி(Put America first) அது அதன் போட்டி சக்திகளால் தோற்கடிக்கப்படாதிருக்க மிகவும் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை தாங்கி வந்தது. இந்தக் கருத்து அமெரிக்காவை ஒரு தற்காப்பு மனோநிலைக்கு தள்ளுகின்ற கருத்தாகும்.

ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்துமாறு கோரினாலும், அதனைத்தான் முன்னைய நிர்வாகங்களும் செய்தது. ஆனால் வேறுபாடு என்னவென்றால் அமெரிக்காவின் விழுமியங்களும், சித்தாந்தமும் இயல்பாகவே அதனை உய்விக்கும் என்பதில் முன்பைவிட தற்போது பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே போட்டி சக்திகளின் வெற்றியை தடுத்து நிறுத்த பாரிய இராணுவ  மேலாதிக்கமும், பலமும் தேவை என்பதாக அது நம்புகிறது. அமெரிக்காவை காப்பாற்றுவதற்கான ட்ரம்பின் மூலோபாயம் கிட்டத்தட்ட தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள அதன் இராணுவத்தை பயன்படுத்துவது என்பதாகவே தெரிகிறது.

முன்னரைப்போல அதிகளவிலான நண்பர்கள் இல்லாமையினால் இப்பொழுது ஆபத்தான் ஆத்திரமூட்டல்களிலும், சீனாவை நேரடியாக சந்திப்பதற்கு தயாராக முன்னர் சீனாவை முடக்குகின்ற நெருக்கடிகளைக் கொண்டு வருவதற்கான அணுவாயுத போர் பற்றிய சூழுரைகளையும் அமெரிக்கா முன்வைத்து வருவது அதன் பலத்தை விட பலகீனத்தையும், பயத்தை, பதட்டத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளது.

7. வட கொரியா - வட கொரியா அணுசக்தி சாதனம் ஒன்றை பரிசோதித்ததுடன் அதன் விநியோக திறன்களை வெளிப்படையாக நிரூபித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிலும் பியோங்யாங் தனது அணுசக்தி திட்டத்தை தொடரும என்பது உறுதியானது. விரைவில் அது அமெரிக்க நிலப்பகுதியை தாக்கும் திறனையும் மென்மேலும் வலுப்படுத்தும். ஒருவகையில் பியோங்யாங் வாஷிங்டனை ஒரு மூலையில் முடக்கியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் வடகொரியா முழுமையாக பயன்படுத்தத்தக்க அணு ஆயுதத்தை தயார்நிலைக்கு கொண்டுவருவதில் ஒரு அங்குல இடைவெளியையே எதிர்நோக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான கால அவகாசம் அமெரிக்காவுக்கு அரிகிக்கொண்டே செல்கிறது. வடகொரியா அணுவாயுதங்களை வைத்திருப்பதை எவ்வாறு அமெரிக்கா விரும்பவில்லையோ அதுபோலவே அது வட கொரியா மீதான முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கும் விரும்பவில்லை. ஆனால் முழுமையான ஆக்கிரமிப்பைக் கொண்டேயல்லாமல் வட கொரிய அணுவாயுதக் களைப்பை செய்ய முடியாது என்ற நிலை தொடர்வதால் அமெரிக்காவின் தடுமாற்றத்தை தெளிவாக உணர முடிகிறது.

8. ஈரானின் பேரவா - அலெப்பாவில் கிளர்ச்சிக்குழுக்கள் பாரியளவில் பின்னடைவை கண்டதன் விளைவு இன்று ஈரான் கடுமையான உற்சாகத்தில் இருக்கிறது. பஷார் அல் அஸாதை முட்டுக்கொடுப்பதிலும், ஈராக்கில் மோசூலை மீள கைப்பற்றுவதிலும், ஐஎஸ்ஐஎஸை தோற்கடிப்பதிலும் ஈரானே முக்கிய பங்காற்றியது. ஈரான் அஸாதை பதவியில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வேண்டிக்கொண்டது. இந்த அமெரிக்க கூட்டுறவு சிரியாவின் எதிர்காலத்தில் தானும் ஒரு முக்கிய பங்கை வகிக்க விரும்பும் ஈரானை வலுப்படுத்துவதற்கும், சிரியாவின் அரசியல் மாற்ற பொறிமுறையில அது ஆதிக்கம் செலுத்துவதற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளது. எனவே 2018இல் நாம் காண ஆவலாகவுள்ள விடயம் என்னவென்றால், ஈரான், அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை தளர்வடையச் செய்வதற்கு சிரியாவை பயன்படுத்தப்போகிறதா? அல்லது அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்ப்பை தெரிவிக்காது அதற்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு அது ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உருவான அரசியல் கட்டமைபபுக்களில் மத்திய வகிபாகத்தை ஆற்றியதைப்போன்று சிரியாவிலும் செயற்படப்போகிறதா? என்பதே ஆகும்.

இவை அனைத்தும் அரை தசாப்த கால யுத்தத்தினால் ஈரானின் உள்நாட்டுப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் இடம்பெறுகின்ற நிலையில், ஏற்கனவே ஈரானிய மதகுருத்துவ ஆட்சியை ஆதரித்த பழமைவாத பிரதேசங்களில் 2017 டிசம்பரின் கடைசி வாரத்திலிருந்து மக்கள் ஆர்பாட்டங்கள் வெடித்துள்ளன. ஈரானுக்குள் ஒரு புயல் காத்திருப்பதுபோல் தெரிகிறது.

9. ஐரோப்பிய ஒன்றியம் - ஐரோப்பா எதிர்நோக்கும் அடிப்படைப்பிரச்சனை அதன் பொருளாதாரம் அல்ல. அது நம்பகத்தன்மை தொடர்பானது. ஐரோப்பாவின் சனத்தொகையில் பெரும்பாலான பங்கை வகிக்கும் நடுத்தர மற்றும் கீழ்மட்ட வகுப்பார்கள் தமது மேற்தட்டு சமூகத்தினர் பொருளாதாரத்தை திறன்பட நிர்வகிப்பதிலும், உருவாகியுள்ள கலாசார பதட்டங்களை புரிந்து கொள்வதிலும் இயலாமையில் இருக்கின்றனர் என்று கருதுகின்றனர். மக்களின் பெரும்பாலானவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொருவருக்குமிடையில் சுக்குநூறாகிப்போயுள்ள நம்பகத்தன்மையை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதில் ஒரு பொதுக்கருத்து உருவாக முடியாதுள்ளது. தேசங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களை எவ்வாறு முகாமை செய்வது என்பதில் பிளவுபட்டு நிற்கவில்லை. மாறாக அவர்கள் தமது மாறுபட்ட அரசியல், பொருளாதார, கலாசார நலன்களின் அடிப்படையிலேயே பிரிந்து நிற்கின்றார்கள். அனேகமாக 2018இல் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரிய சோதனையை சந்திக்க நேரிடும்.

10. ரஸ்யா - சீனா கூட்டணி - சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் உருவாகிவரும் ஆழமான ஒத்துழைப்பு அமெரிக்காவிற்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் உஷாரடைந்துள்ள வாஷிங்டன் உலகெங்கிலுமுள்ள தனது நட்பு நாடுகளை பலப்படுத்தி தமது உறவுகளை உறுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாக ரஸ்யாவும், சீனாவும் இன்றுள்ள சர்வதேச ஒழுங்கில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற பிடியை பலகீனப்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற நிலையிலும், அமெரிக்க நட்பு நாடுகள் பல வாஷிங்டனுடனான உறவை மட்டுப்படுத்தி வரும் நிலையிலும், உருவாகியிருக்கும் உலகில் பலம்பொருந்திய நாடுகளுக்கு இடையிலான ஸ்தானங்களில் நிலையற்ற தன்மை இனி வரவிருக்கின்ற உலக ஒழுங்கிற்கு வித்திடக்கூடியதாக இருக்கும். 2018இலும் இந்தப்போக்கின் வளர்ச்சியை நாம் தெளிவாகக் காணலாம்.

 

உங்கள் கருத்தை இணைக்க


Security code
Refresh